Tuesday, 4 December 2012

மெளன ஒலி

காதலர்கள் கண்களால் பேசுவதைப் பார்த்திருப்பீர்கள் / கேட்டிருப்பீர்கள் / உணர்ந்தும் இருப்பீர்கள். அதாவது காதலியின் கண் அசைவினை காதலனின் கண் வழியாக மூளை உணர்ந்து அதன் அர்த்தத்தை ஆன்மாவிற்கு தெரியப்படுத்துகிறது.

இந்தச் செயல் இரண்டு பேர்களுக்கு இடையில் முழுவதுமாக புரிந்துகொள்ளுமளவிற்கு நடைபெற வேண்டுமானால், அவ்விருவருக்கும் மன ஒற்றுமை வேண்டும். எண்ண அலைகள் ஒன்றாக இருக்க வேண்டும். இந்த பரிமாற்றத்தின் செயலை மெளன ஒலி எனலாம். இது மிக குறைவான வினாடிகளில் நிகழுந்து முடிந்துவிடும்.

நமது இதிகாசங்களிலிருந்து பல விசயங்களை எடுத்து தயாரிக்கப்பட்ட ”அவதார்” படத்தைப் பார்த்திருப்பீர்கள், கிருஷ்ண பரமாத்மா கருடன் மீது
செல்வது போல், அந்த ஹீரோ ஒரு பறவையின் மீது உட்கார்ந்து தன் முடியின் நுனியை அந்த பறவையின் முடியுடன் இணைத்துக்கொள்வான், இது பறவைக்கும், அவனுக்குமான எண்ண பரிமாற்றங்கள் நிகழ உதவும். அதாவது எவ்வளவு வேகத்தில் பறக்க வேண்டும், எங்கு திரும்ப வேண்டும் போன்ற பரிமாற்றங்கள்.
இந்த மெளன ஒலி மகாபாரதத்தில் குருட்சேத்திர போரில் முதல் நாள் அன்று, கீதை உபதேசிக்கும் போது கிருஷ்ண பரமாத்மாவிற்கும், அர்ஜூனனுக்கும்  இடையே நிகழ்ந்தது.

எப்படி என்றால்...

கீதா உபதேசம் 700 பாடல்களாக, 18 அத்தியாயங்களில் உள்ளது. ஒரு பாடலுக்கு 30 வினாடி என்று வைத்துக்கொண்டாலும், முழுவதுமாகப் படிக்க 350 நிமிடங்கள் (சுமார் 6 மணி நேரம்) ஆகும். சரி இதை ஒருவர் மனப்பாடமாகச் சொல்லிக் கேட்டாலும் குறைந்தது 4 மணி நேரமாவது ஆகும்.

குருட்சேத்திரத்தில் போரின் முதல் நாள் இரு மாபெரும் படைகளுக்கு நடுவே நின்று, கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு மட்டும் தான் கீதா உபதேசம் செய்தார்
(சஞ்சயன் மூலமாக திருதராஷ்டிரன் கேட்டிருக்கலாம்). மற்ற வீரர்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாது. ஆகையால் அந்த 4 மணி நேரம் எல்லா
வீரர்களும் சும்மா நின்றிருப்பார்களா? அல்லது துரியோதனன் தான் சும்மா விட்டிருப்பானா?.

இங்கு தான் மெளன ஒலியின் சிறப்பைக் காணலாம், அதாவது கிருஷ்ண பரமாத்மாவிற்கும், அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த கீதா உபதேசம் சில
வினாடிகளிலேயே முடிந்திருக்கும், எண்ண அலைகள் ஒன்றாகி ஆன்மாவிற்குள் ஏற்ப்பட்ட இந்த பறிமாற்றம் மெளன ஒலி யாகவே நடந்தது.

No comments: