Thursday, 22 November 2012

360 (சிறுகதை)

முன்னுரை:
                           எனது இந்த முதல் கதையை படிக்கும் உங்களுக்கு என் நன்றி. எழுத்து நடையில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்.

சிறுகுறிப்பு:
                          ஒவ்வொரு உயிரினங்களும் மனிதர்களைப்போல தனக்கே உண்டான பாஷையும், உணர்வும், அறிவும் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். இதைக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த கதை. இதில் இயற்கை என்ற நம்மால் புரிந்துகொள்ள முடியாத ஒன்றை அதன்
நிலையில் இருந்து உணர்ந்து எழுதி இருக்கிறேன். 
 


இனி...

வளர்ந்து வரும் நாகரீகத்தின் ஆசைக்கு அடிமையாகி விட்ட மனிதன், தன் அறிவீனத்தால் பல தவறுகளை மற்ற உயிரினங்களுக்கும், இயற்கைக்கும் செய்கிறான். ஆனால் இயற்கை தன்னால் முடிந்த வரை மற்ற உயிரினங்களுக்கு நன்மை செய்கிறது.

உலகம் தோன்றிய நாளிலிருந்தே ஒவ்வொரு வினாடியும் நிகழும் நிகழ்ச்சிகள் முதலிலேயே தீர்மானிக்கப்பட்டவை என்பதற்கு மகாபாரதத்திலிருந்து பல நிகழ்வுகள் உங்களுக்கே தெரிந்திருக்கும். இங்கு நீங்கள் படிக்கும் இந்த நிகழ்வும் அதே போல் ஒன்று தான்.

சுமார் 30 ஆண்டுகள் பின்னோக்கி வயல் வரப்புகளும் ஒத்தையடி பாதைகளும் இருக்கும் கிராமத்திற்குச்செல்வோம். மாலை நேரம் சூரியன் தன் பார்வையை பூமியின் இந்த் பகுதியிலிருந்து விலக்கி வேறொரு பகுதிக்கு செலுத்தி கொண்டிருந்தது. பாட்டி காட்டில் தனது வேலைகளை முடித்து விட்டு அடுப்பெரிப்பதற்க்காக சில விறகு கட்டைகளை தலையில் வைத்துக்கொண்டு தன் வயது முதிர்ந்த தேகத்திற்கு பிடித்தமான மாம்பழ கொட்டையை சப்பிக்கொண்டே மெதுவாக நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறாள்.


முக்கனிகளில் முதல் கனியை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும். அந்த பாட்டி ரசித்து ருசித்து சாப்பிடுவதைப் பார்த்தால் அதை பிடுங்கிச் சாப்பிட வேண்டும் என்று தோன்றாதா?. சரி பாவம் அதை பாட்டியே சாப்பிடட்டும். நாம் கதைக்கு வருவோம்.

பாட்டி அந்த மாம்பழ கொட்டையை கடைசியாக ஒருமுறை சப்பி சாப்பிட்டு விட்டு தூக்கி எறிகிறாள். அது சற்று தள்ளி மணல் வெளியில் இரண்டு மூன்று பல்டி அடித்து மணல் துகள்களை தன் மேல் ஒட்டிக்கொள்கிறது. இதைப்பார்த்ததும் மேகங்கள் தன் நிறத்தை கருமையாக்கிக் கொண்டது. 

மழைக்கு முன்னால வீட்டுக்கு போயிறனும் ஆண்டவா. பாட்டி புலம்பிக்கொண்டே தன் நடையை வேகப்படுத்துகிறாள். அப்படியே தன் பின்னால் ஆடுகள் கூட்டமாக ஓடிவருவதை திரும்பிப் பார்க்கிறாள். ஆடுகளின் ஓட்டத்தை பார்க்கும் போது இன்னும் சில நிமிடங்களில் அவைகள் பாட்டியை முட்டி கீழே தள்ளிவிடும் போல் இருந்தது. இத்தனை வேகத்தில் வந்த ஆடுகளின் கால்களில் பட்ட மாங்கொட்டைகள் மணல் பகுதிக்கு உள்ளே சென்றது. இப்போது இயற்கை சிறிது புன் முறுவலுடன் (இடி இடிக்கும் சத்தம் கேட்கிறது) தன் வேலையை செய்ய தயாராகிறது. மழை பெய்ய ஆயத்தமாகிறது.

முன்னே சென்று கொண்டிருந்த பாட்டி சற்று ஓரமாக ஒதுங்கி நிற்கிறாள்.

ஏண்டாப்பா ஆடெல்லாம் பாதையில போகாம இந்த பக்கம் ஓடி வருது என்று ஆடு மேய்க்கும் சிறுவனிடம் கேட்டாள்.

அங்க மாட்டு வண்டி விரசலா வந்துச்சு பாட்டி, அதனால தான் இதுகளெல்லாம் இங்க வந்துடுச்சு என்று மூச்சிறைக்க சொல்லிக்கொண்டே ஆடுகளின் பின்னால் ஓடுகிறான்.


சரி, சரி வேகமா போ, மழை வர போகுது என்று கூரிக்கொண்டே பாட்டியும் வீடு நோக்கி முன்னேறினாள்.

சிறிது நேரத்தில் மழை பெய்து அந்த பகுதியை ஈரமாக்கியது. மாங்கொட்டைக்கு தண்ணீர் ஊற்றியது போல் ஆனது. இதைத்தான்

தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல்
 அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை.
”  - என்று கூறினார்கள் போலும்.

இயற்கையின் இந்த செயலினால் மாஞ்செடி வளர ஆரம்பிக்கிறது. இயற்கை தன்னால் முடிந்த நல்லதை செய்கிறது. மனிதனும் அதற்க்கு விலக்கல்ல. அந்த வழியாக தினமும் செல்லும் ஆடு மேய்க்கும் சிறுவன் மணல் வெளியில் சிறு செடி இருப்பதை பார்த்து செடியை சுற்றி பாத்தி கட்டி பிறகு முள் வேலி இட்டு சிறிது தண்ணீர் ஊற்றுகிறான்.

இப்போது செடி இன்னும் வளருகிறது. அந்த வழியாக செல்லும் பாட்டியும் அவ்வப்போது செடியை பராமரிக்கிறாள். காலங்கள் ஓடுகிறது. செடி மரமாகிறது. 
  30 ஆண்டு காலங்கள் உருண்டோடியது. நாகரீகம் வளர்ச்சியடைகிறது. சிறிது சிறிதாக அந்த பகுதியில் வீடுகள் ஆக்கிரமிக்கிறது. இயற்கைக்கு எதிராக மனிதன் பல பாவச்செயல்களை செய்கிறான். நம் கண்ணெதிரே வளர்ந்த அந்த மாமரத்தின் அருகில் சில ஆட்கள் நின்று நிலத்தை அளக்கிறார்கள்.

ஒருவரை பார்க்கும் போது புரோக்கர் போலவும், இரண்டு பேர் அரசு வேலை செய்பவர் போலவும் பாவனைகளில் தெரிகிறது. இரண்டு கையாள்கள் நிலம் அளக்கும் இஞ்ச் டேப் வைத்து இருக்கிறார்கள். இவர்களில் மிகவும்
பளிச்சென்று டிப் டாப் பாக வெள்ளை வேட்டி சட்டை போட்டு ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் தான் அந்த நிலத்தை வாங்கும் நபராக இருக்க வேண்டும்.

புரோக்கர் அந்த டிப் டாப் ஆசாமியின் அருகில் வந்து, இது தான் சார் நம்ம லே-அவுட். இதுல தென் பக்கம் அஞ்சு வீடு, வட பக்கம் நாலு வீடு கட்டலாம் என்று கூரினார்.


ம்... எல்லாம் சரி, இந்த மரம் கொஞ்சம் இடைஞ்சலா இருக்கும்னு நினைக்கிறேன். அதுக்கு என்ன பண்ணலாம்?.

அது ஒன்னும் பெரிய விசயம் இல்ல சார். மரத்த கட் பண்ணிடலாம்.

சரி, அப்போ லே-அவுட் போட்டுடுங்க, இந்த மரத்த கட் பண்ணிடுங்க, அப்புறம் அப்ரூவல் வாங்கிக்கலாம், என்று தனக்கே உரித்தான தோரணையில் சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மரத்தை அறுப்பதற்கு எந்திரம் வரவழைக்கப்படுகிறது.

நடப்பது நடந்து கொண்டே தான் இருக்கும் என்று முதலிலேயே தீர்மானிக்கப்பட்டாலும், எல்லா உயிர்களும் தன்னை காத்துக் கொள்ள ஏதாவது முயற்சிகளை கண்டிப்பாக மேற்கொள்ளும். இதைத்தான்

குடிசெய்வல் எனும் ஒருவர்க்கு தெய்வம்
 மடிதற்று தான்முந் துறும்
”  என வள்ளுவர் கூறியது போல்.

மாமரம் தன் முயற்சியை மேற்கொள்ளும் போது, இயற்கையும் உதவி செய்கிறது.

மரம் பலமாக தன் கிளைகளை அசைத்து பலத்த காற்றை உருவாக்கியது. அந்த காற்றின் வேகத்தில் புழுதி பறக்கிறது. மணல் அள்ளி வீசப்படுகிறது.

கோபம் கொண்ட பீமன் ஜராசந்தன் சண்டையினை மகாபாரதத்தில் குறிப்பிட்டதைப்போல, அந்த இடமே கலேபரமானது. அதை தாங்க முடியாமல், அவர்கள் திரும்பி சென்றனர்.

மறுநாள் அந்த ஆள்கள் வருகிறார்கள், புரோக்கர், எந்திரத்தின் டிரைவரிடம் கேட்கிறார், போன் பண்ணியே என்ன பிரச்சனை?.

சார் மிஷின்ல ஏதோ ப்ராப்ளம், நேத்து காத்தடிச்சதுல மண்ணெல்லாம் வாரி போட்டு இஞ்சின் வொர்க்காகல. இன்னிக்கு கட் பண்ண முடியாது. என்று டிரைவர் சொல்கிறார்.

ஊருக்குள்ள மரம் அறுக்கரவங்க இருந்தா வேலைக்கு கூப்பிடுப்பா என்றார் அந்த டிப் டாப் ஆசாமி.

எல்லோரும் இப்ப வேலைக்கு போயிருப்பாங்க சார், இன்னிக்கு சொல்லிவச்சா, நாளைக்கு வந்துடுவாங்க, ஒரு நாள் கூலி கொடுத்தரலாம். என்றார் புரோக்கர்.

இந்த சம்பாஷனைகளை எல்லாம் இயற்கை தன் செவிகளை கூர்மையாக தீட்டி கேட்டுக்கொண்டிருக்கிறது.

மூன்றாம் நாள், டிப் டாப் ஆசாமி புரோக்கரிடம், கூலியாட்கள் வந்தாங்களா?. என்றார்.

அதற்கு புரோக்கர், இல்ல சார், ஊருக்குள்ள பெருசு தல சாஞ்சிடுச்சு. அதனால ஊரே சோகத்துல அவங்க வீட்ல தான் இருக்காங்க.

நான்காம் நாள், மனிதன் தன் மூளையின் அபரிமிதமான வளர்ச்சியினால் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல், கண்ணிருந்தும் குருடனாய் பல தவறான செயல்கள் செய்கிறான்.

அவர்கள் மரத்தை வெட்டுகிறார்கள், அந்த இடத்தில் புதிதாக வீடுகள் கட்டுகிறார்கள்.

”பரமண்டலத்தில் இருக்கும் என் பிதாவே! இவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாதவர்கள், என் பொருட்டு இவர்களை மன்னியும்”  என்ற இயேசு பிரானின் வார்த்தைகளை, இயற்கை சொல்கிறது என்பது இதைப்படிக்கும் உங்கள் காதுகளில் கேட்டிருக்கும்.

அங்கு குடியேறும் ஒரு குடும்பத்தில் அன்று பூஜை செய்து முடித்துவிட்டு மற்ற சாமான்களை எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வீட்டு பெண் குழந்தை அப்பா, அம்மாவிற்கு தெரியாமல் பூஜை செய்து வைத்திருந்த பழங்களில் மாம்பழத்தை எடுத்து வீட்டிற்கு வெளியே வந்து சாப்பிட்டு கொண்டிருந்தது.

அந்த நேரத்தில், அப்பு எங்க இருக்க இங்க வா என்று அம்மாவின் குரல் கேட்கிறது.

உடனடியாக அந்த பெண் குழந்தை தன் கையில் உள்ள மாம்பழத்தை தூக்கி எறிவதற்காக கையை ஓங்குகிறாள். உடனே பழத்தைப் பார்த்து விட்டு

கடைசியாக ஒருமுறை சப்பி விட்டு தூக்கிப்போடுகிறாள் !. அது சிறிது தள்ளி முன்பு மாமரம் இருந்த இடத்தின் அருகில் போய் விழுகிறது.
(இயற்கை மீண்டும் புன்முறுவல் செய்கிறது. அதாவது இடி இடிக்கிறது.)

அந்த ப்ளாட் டில் வேலை முடியும் தறுவாயில் இருப்பதனால், அங்கு வேலை செய்யும் ஒருவன் தேவையற்ற மணல் மற்றும் சில செங்கல் பொடிகளையும் மாங்கொட்டை விழுந்த இடத்தில் கொட்டுகிறான்.
(இயற்கை இப்பொது தன் வேலையை செய்ய தயாராகிறது)

மேகங்கள் கருப்பாகிறது, மழை பெய்ய தொடங்குகிறது. மீண்டும் செடி வளர்கிறது.


தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் - அவர் பொருட்டு
 எல்லோர்க்கும் பெய்யும் மழை.
” - (ஒளவையார்.)

இயற்கைக்கும், உயிரினங்களுக்குமான இந்த சுழற்சி (360 டிகிரி) தினம் தினம் நடந்து கொண்டே இருக்கிறது. முடிந்தவரை நம்மால் ஆன உதவியை இயற்கைக்கு செய்வோம். 


மரம் நடுவோம், மழை பெறுவோம்.

By
முத்துராமன்.


(மேலே சொன்ன நிகழ்வுகளை short film எடுப்பதற்காகத்தான் எழுதினேன், ஆனால் முடியவில்லை. ஆகையால் சிறுகதை போல் என் blog spot ல் எழுதியிருக்கிறேன். யாரேனும் short film எடுக்க விரும்பினால், என்னையும் உங்களோடு சேர்த்துக்கொள்ளுங்கள்.)

2 comments:

sanju said...

nice story atthan!

indhu said...

the story is very nice...